தூத்துக்குடி: பெட்ரோல், டீசல் விலையை அவர்கள் உயர்த்துவார்கள்; நாங்கள் குறைக்க வேண்டுமா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாட்டின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் இருந்த ஒரேவழி பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் என்றுபொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைக்கும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினால். மத்தியஅரசு 2வது முறையாக எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது,  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மத்தியஅரசின் வேண்டுகோளுக்கு எதிராக தமிழகஅரசு, நாங்கள் ஏன் விலையை குறைக்க வேண்டும் என்று விமர்சித்து வருகிறது. எங்களிடம் கேட்டா விலையை உயர்த்தினார்கள் என்று பிடிஆர் கேள்வி எழுப்பியதுடன், 900 சதவிகிதம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், வெறும் 50 சதவிகிதம் மட்டும் குறைப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், மத்திய நிதிஅமைச்சரின் வலியுறுத்தலுக்கு பதில் அளித்து உள்ளார்.  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என அனைத்து மாநிலங்களும்  விமர்சனம் செய்து வருகிறது என கூறினார்.

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையில்  பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறப்பட்டிருந்தது. சொன்னபடி அதை நிறைவேற்றவில்லை என்றால் 72 மணி நேரத்தில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என அனைத்து மாநிலங்களும்  விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.