சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திடீரென தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கி வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது திடீரென தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று கூறியிருப்பது  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பிறகு, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாத சூழலே நீடித்து வருகிறது..  கடந்த 1967ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. திமுக, அதிமுக என்று மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து வருகிறார்கள். 100ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி,  ஏதாவது ஒரு திராவிட கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்தே வருகிறது. தென்மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மரியாதையும், பெருமையும் உள்ள நிலையில், அதை வளர்த்தெடுப்பதில் மாநில தலைவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், இன்றுவரை காங்கிரஸ் கட்சி அடிமைக்கட்சியாகவே தொடர்ந்து வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று வாய்சவாடால் மட்டும் விட்டு வருகின்றனர். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடனே திராவிட கட்சிகளின் காலில் விழுந்து, எங்களுக்கு ஏதாவது தாருங்கள் என்று தரம் தாழ்ந்து செல்லும் சூழலே உள்ளது. இதனால் பல இளந்தலைமுறைகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி மாற்றுக்கட்சிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். அவர்களை தக்க வைத்துக்கொள்வதில்கூட கட்சி தலைமை ஆர்வம் காட்டுவதில்லை.

பழைய தலைகள் (மூத்த தலைவர்கள்) எல்லாம் ஆளுக்கு ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு, கட்சியை ஒற்றுமையாக செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டு, தங்களது தனி செல்வாக்கை நிலைநிறுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை தடுக்க முடியாத நிலையே கட்சியின் வளர்ச்சியை தடுத்து வருகிறது.

தற்போது, மாநில தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரிகூட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியேற்றதும்,  கோஷ்டி அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை என்றார். இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் தலைமையை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூறியிருந்தார். ஆனால், அவரது செயல், அவரது வார்த்தைக்கு மாறாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சியையைச் சேர்ந்த இளந்தலைவரான, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் மனிதவெடிகுண்டால், சின்னப்பின்னமாக்கப்பட்ட படுகொலை விவகாரத்திலும், பேரறிவாளன் விடுதலை விஷயத்திலும், தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல், ஆளும் திராவிட கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் வகையிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும், மாநில தலைவரின்  செயல்பாடும் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் படு மோசமாக  நெட்டிசன்களால் கழுவி ஊற்றப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று  திடீர் ஞானோதயம் வந்தவராக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கே.எஸ்.அழகிரி,  ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையாக மன்னித்துள்ளனர். ஆனால் மக்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்கும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் சட்டம் அவரை தூக்கில் போட்டது. அதுபோன்றுதான் பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. தமிழர் என்பதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கொலை செய்த ஒருவரை நாம் விடுவிக்கலாமா?

தமிழ்நாட்டில் கொலை-கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட சுமார் 500 முதல் 600 பேர் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில்களில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்களும் தமிழர்கள்தான்.

ராஜீவ் கொலை கைதிகள் மேலும் 6பேரை விடுவிக்க முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை ஏன் விடுவிக்கக் கூடாது? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

இதையெல்லாம் உணர்ந்துதான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உருவானது. இத்தகைய முரண்பாடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் தி.மு.க. தரப்பிலும் எங்களுடன் கூட்டணியை தொடர்ந்தனர். இந்த கொள்கை முரண்பாடுகள் கூட்டணியை ஒருபோதும் சிதைத்தது இல்லை. பொது எதிரியை வீழ்த்துவதற்காக மாறுபட்ட கொள்கையை கொண்ட கட்சிகள் ஓர் அணியில் திரள்வது இயல்பானதுதான். அந்த வகையில் மதசார்பின்மை என்பதுதான் எங்கள் கூட்டணியின் ஒரே இலக்கு. இந்த நிலையில் கொலை குற்றம் செய்தவரை வரவேற்பது ஆச்சரியமாக உள்ளது.

தமிழக காங்கிரசுக்கு நான் தலைவரான பிறகு பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தது உண்டு. ஆனால் அதை நான் ஊக்கப்படுத்தியது இல்லை. அதனால்தான் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 72சதவீத வெற்றி கிடைத்தது. எனது அனுபவத்தை பொறுத்தவரை ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும் என்பது இல்லை. அந்த செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் திறன் இருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 1991-ம் ஆண்டு எங்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்தது. ஆனால் அதை அ.தி.மு.க. அறுவடை செய்தது.

கூட்டணி என்பது கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால், தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரசை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்து விட்டன. தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப் படுத்தி விட்டது என்பதே உண்மை. கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியை குறைத்து பாதித்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை. ஒரு கூட்டணி வலுவாக இருந்தால் கட்சியையும் அது வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இது சொல்வதற்கு எளிது. செயல் படுத்துவதற்கு கடினமாகும்.

தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டும். சில தேர்தல்களில் நாம் தோற்க நேரிடலாம். மக்கள் உடனடியாக நமக்கு ஓட்டு போட்டு விட மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனித் தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். தனி நபர்கள் தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் அது அவர்க ளுக்கு தோல்வியைத்தான் தரும்.

தமிழகத்தில் பல கட்சிகள் தோன்றி உள்ளன. சிறந்த பேச்சாளர்கள் அவற்றில் இருந்தனர். மணிக்கணக்கில் பேசுபவர்கள் கூட இருந்தார்கள். ஆனால் எல்லோராலும் வெற்றி பெற இயலவில்லை. காங்கிரசின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான விஷயங்களுக்கு திட்டமிட வேண்டும். இலக்கு நிர்ணயிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகுதான் காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ச்சிப் பெற மக்கள் உதவி செய்வார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.