சென்னை: ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. விலையை கட்டுப்படுத்தவும் அனைத்து ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் விவசாயம் தொடர்பான எந்திரங்கள் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. அரசு கிடங்குகளை விவசாயிகள் கட்டணமின்றி பயன்படுத்தலாம்.

தனியார் நடத்தும், உரம் மற்றும் விதை விற்பனை கடைகள் திறக்க தடை இல்லை. மொத்த வியாபாரிகள், காய்கறிகள், பழங்கள் வாங்குவதை நிறுத்தியதால், தோட்டக்கலைத்துறை வாயிலாக, அரசே அவற்றை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில், 5,421 நடமாடும் காய்கறி கடைகள் துவக்கப்பட்டு, காய்கறிகள் விற்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, உள்ளாட்சித் துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. 3,344 டன் மொபைல் யூனிட் மூலம் 1,100 மினி ட்ரக் மூலம் சென்னை மாநகராட்சி 4,200 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறிகளை விநியோகம் செய்கிறது.

தற்போது ஊரடங்கால் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. அதற்கு ஒரு யோசனை செய்துள்ளோம். சென்ட் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி பூக்களை கொள்முதல் செய்ய கூறி இருக்கிறோம்.

இந்த சமயத்தில் சென்ட் தயாரிப்பை அதிகப்படுத்துங்கள். ஊரடங்கு முடிந்த பிறகு விற்பனைக்கு வழி ஏற்படுத்தி தருவதாக சொன்னதன் அடிப்படையில் 35 டன் பூக்களை திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டோம் என்றார்.