பெங்களூரு மாநகரப் பேருந்தில் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரை கட்டாயப்படுத்தி குல்லாவை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நேரத்தில் தங்கள் மத அடையாளங்களை அணியலாமா ? கூடாதா ? என்பது விவாதப்பொருள் ஆகியுள்ளது.

”பணி நேரத்தின்போது தொப்பி அணியலாமா? இது உங்கள் சீருடை தொடர்பான விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? எதற்காக தொப்பி அணிந்திருக்கிறீர்கள்?” என்று ஓட்டுனரைப் பார்த்து பெண் பயணி அந்த வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அந்த நடத்துநர், ‛‛நான் நீண்ட காலமாக அணிந்து வருகிறேன். பணி நேரத்தில் இதனை அணியலாம் என நினைக்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.

அதற்கு அந்தப் பெண், ‛‛உங்களின் மதம் சார்ந்த விஷயங்களை வீட்டிலும், மசூதியிலும் பின்பற்றி கொள்ளுங்கள். பணியின்போது இதுபோன்று தொப்பி அணியாதீர்கள். இதனை நான் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார்.

‛‛நான் இவ்வாறு தொப்பி அணிந்ததற்கு இதுவரை யாரும் ஆட்சேபிக்கவில்லை. நானும் உயரதிகாரிகளிடம் கேட்கிறேன்” என்று அந்த நடத்துனரும் அமைதியாக பதிலளித்தார்.

”சட்ட விதிமுறைகளில் இல்லாவிட்டால் தொப்பியை கழற்றி விடுங்கள்” என அந்தப் பெண் கூறியதை அடுத்து தனது தலையில் இருந்து தொப்பியை அந்த நடத்துனர் கழ‌ற்றினார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பணியில் இருந்த அரசு ஊழியரிடம் வம்பிழுக்கும் விதமாக பெண் பயணி பேசியபோதும் அவரிடம் அமைதியாக பதிலளித்த நடத்துனர் அந்த பெண்ணின் ஆட்சபனையை அடுத்து எந்த ஒரு எதிர்ப்பும் கூறாமல் தனது குல்லா-வை கழற்றியது நடத்துனரின் செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பி.எம்.டி.சி. செய்தி தொடர்பாளர் லதா, “பணியின் போது மத அடையாளங்களை அணியக்கூடாது என்று எந்த ஒரு விதியும் போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “சபரிமலை செல்லும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் விதமாக அணியும் மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார்.