டெல்லி: பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட கால அவகாசம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு செய்து மத்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது.

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன.   திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல்  உள்ளன. இதனால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதை களைந்து அனைவரும் ஒன்றோ என்ற நோக்கில்,   நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும், பல நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. அதுபோல மத்திய பாஜக அரசின் தேர்தல் அறிக்கையிலும், பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும், பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அதற்கான பணிகள் முடிந்து, பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலரிடம் கருத்து கேட்டு வருகிறது.

பொதுசிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும், பலரும் பொதுசிவில் சட்டம் குறித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு ஆன்லைன், கடிதம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கள் கருத்தை தெரிவித்து வந்தனர். இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுசிவில் சட்டம் குறித்து வரும் 28ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு, வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுச்சிவில் சட்டம் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.