ஐதராபாத்: 

”வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழை மக்களுக்கு வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என்று, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“பிரதமரின், ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தில், வங்கிக் கணக்கு துவக்கி இருப்பவர்கள்  குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் இருந்தாலும் எந்தவித அபராதமும் வங்கிகள் விதிப்பதில்லை. அவர்களுக்கு, மாதாந்திர சராசரி இருப்பை பராமரிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில், பி.எஸ்.பி.டி., எனப்படும், அடிப்படை சேமிப்பு கணக்கு, ஏழைகளுக்காகவே நடத்தப்படுகிறது.  இக்கணக்கில், எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

ஒரு வாடிக்கையாளர், தனக்கு அனைத்து வசதிகளும் உள்ள, முழுமையான சேமிப்பு கணக்கு தேவை இல்லை எனக் கருதினால், அவர், பி.எஸ்.பி.டி., கணக்கிற்கு மாறிவிடலாம்.

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதாக கூறப்படுவது தவறு.  ஊடகங்கள் கிளப்பி விடும் தேவையற்ற சர்ச்சைதான் இது” என்று அவர் தெரிவித்தார்.