டார்வின் கோட்பாடு சர்ச்சை: “இது போன்ற கருத்துக்களை பேசாதீர்!: இணை அமைச்சருக்கு ராஜாங்க அமைச்சர் கண்டிப்பு

Must read

டில்லி:

குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக கூறும் டார்வின் தியரி தவறு என பேசிய மத்திய இணை அமைச்சரை, துறையின் ராஜாங்க அமைச்சர் கண்டித்துள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரி சத்யபால் சிங், கடந்த வாரம் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “டார்வின் பரிணாம வளர்ச்சிக்கோட்பாடு, அறிவியல் ரீதியில் தவறானது. அதை பாடத்திட்டத்தில் இருந்து மாற்ற வேண்டும், இந்தப் பூமியில் மனிதன் எந்தக்காலத்திலும் மனிதனாகவே இருந்து உள்ளான். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என முன்னோர்கள் யாரும் எங்கும் கூறவில்லை” என்று  பேசினார்.

இவரது  கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “டார்வின் பரிணாம வளர்ச்சிக்கோட்பாடு தவறானது என நிரூபிக்க தேசிய அளவில் கருத்தரங்கு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து எனது ராஜாங்க மந்திரி சத்யபால் சிங்கிடம் விவாதித்தேன். இப்படிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு அவரிடம் தெரிவித்தேன்.  அறிவியலை நாம் நீர்த்துப்போக செய்யக்கூடாது. இதை அவருக்கு அறிவுரையாக கூறி உள்ளேன்” என்று தெரிவித்தார்.

More articles

Latest article