பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி மீதான மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில்,  மாநில முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில், 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.  காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தும், முதல்வர் பதவிக்கு கடும் போட்டி எழுந்த நிலையில், சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் தலா இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என வாய்மொழி ஒப்பந்தம் செய்யப்பட்டு, சித்தராமையா முதல்வராக பதவி ஏற்றார். டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

முதல்வர் பதவி காலம் இரண்டரை ஆண்டுகளை கடந்த நிலையில், அவர் பதவி விலக மறுத்து வந்ததால், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது. துணை முதல்வராக இருந்த டிகே சிவகுமார் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.  சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. ஒப்பந்தப்படி அவர் பதவி விலகுவாரா அல்லது நீடிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லி அழைத்து பேசியது.   கார்கே, ராகுல்காந்தி உள்பட கட்சியின் மேலிட தலைவர்கள்,  அவர்களிடம்  சுமார் 7 மணி நேரம், ஆலோசனை நடத்தினர். பல கட்ட ஆலோசனைக்கு பின், முதல்வர் பதவியை விட்டு கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.

இன்று காலை 10:30 மணிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, தன் ராஜினாமா கடிதத்தை, சித்தராமையா வழங்க உள்ளார். அதற்கு முன், அமைச்சர்களுக்கு தன் இல்லத்தில் காலை உணவு விருந்து கொடுக்கிறார். இதில் சிவகுமாரும் பங்கேற்கிறார். விருந்து முடிந்ததும் அமைச்சர்கள் புடைசூழ, கவர்னர் அலுவலகத்திற்கு சென்று, சித்தராமையா தன் ராஜினாமா கடிதத்தை வழங்கக இருப்பதாக தகவ்லகள் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]