சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன்.

இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த இவர்களுக்கு அவர்களது ஜாதி பெயரைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சர்ச்சையானது.

இந்த நிலையில் வனவிலங்குகளை வேட்டையாடி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாகவே அமலாக்கத்துறை இவர்களுக்கு சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஆத்தூரைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் சகோதரர்களுக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது இதன் அருகில் நிலம் வைத்திருக்கும் குணசேகரன் என்பவர் இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குணசேகரன் பாஜக கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார் என்றும் அவரது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருவதாகவும் இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் நிலத்தில் அவர்கள் பயிர்வைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் மீது தங்கள் நிலத்தில் மின்வேலி அமைத்து காட்டெருமைகளை கொன்றதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2017 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 2021ம் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

இந்த நிலையில் இது வனவிலங்கு தொடர்பான வழக்கு என்பதால் வனவிலங்குகளை வேட்டையாடி சட்டவிரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை இவர்களை விசாரணைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய பின் அதில் மேல்முறையீடு ஏதும் செய்யாமல் அந்த வழக்கின் மீது அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை துவங்கியது எப்படி என்றும் இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் வழங்கியது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தவிர, விவசாயிகள் இருவரையும் சொத்து ஆவணங்களோடு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பிதற்கு என்ன காரணம் ? யாருடைய தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே திண்டுக்கல் அருகே முடிந்து போன வழக்கு ஒன்றை கையில் எடுத்து வழக்கில் தொடர்புடைய மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அதே பாணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.