லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து ஓட்டுனர்களுக்கு எதிரான கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் இந்த புதிய சட்டப்பிரிவுக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து மத்திய அரசு இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நிறைவேற்றப்பட்ட 3 புதிய கிரிமினல் சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்கள் முழுதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் வடமாநிலங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது தவிர தனியார் பேருந்து ஓட்டுநர்களும் களத்தில் இறங்கியதால் பொதுப்போக்குவரத்தும் பெரிதும் முடங்கியது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர்களின் இந்த போராட்டம் பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியது.

இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த போராட்டம் மத்தியில் ஆளும் பாஜவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஓட்டுனர்களுக்கு எதிரான இந்த புதிய சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.