சென்னை: காஞ்சிபுரத்தில் பிரபலமான பச்சையப்பாஸ், செங்கல்வராயன் துணிக்கடைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பச்சையைப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும்,  செங்கல்வராயன் சில்க்ஸ்,எஸ்.கே.பி. நிதி நிறுவனம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பாஸ் சில்க்ஸ் துணிக்கடையின் உரிமையாளர்கள் வீடு மற்றும் தியாகராய நகர், வேலூரிலுள்ள கடைகள், அலுவலகங்கள் என மொத்தமாக 30 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை எட்டு மணி முதல் இந்தச் சோதனையானது நடைபெற்றுவருகிறது. சோதனைக்குச் சென்றபோது, கடையில் இருந்த பொதுமக்கள், நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது நிறுவனத்தின் ஷட்டரைப் பூட்டி சோதனை நடைபெற்றுவருகிறது.