டில்லி:

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத அனுமதி இல்லை என்ற  சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் தடை விதிக்க மறுத்து ஒப்புதல் கொடுத்த நிலையில், இன்று  டில்லி உயர்நீதி மன்றமும் ஒப்புதல் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக அடுத்து வரும் ஆண்டுகளில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வை எழுத முடியாத நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பு குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்த பிப்ரவரி மாதம்   22ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், பொதுப் பிரிவினரின் வயது  25 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். மனுவை  விசாரித்த உச்சநீதி மன்றம், சி.பி.எஸ்.இ.யின் முடிவில் தலையிட முடியாது என்றும்,  இதுபோன்ற வழக்குகளுக்கு உயர்நீதி மன்றங்களை நாடலாம் என்றும் கூறி மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து,  சிபிஎஸ்இ-ன் வயது உச்சவரம்பு குறித்த அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி மனுதாரர்கள் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 28ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி உயர்நீதி மன்றம், சிபிஎஸ்இ அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் டில்லி உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தரப்பில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட டில்லி உயர்நீதி மன்றம் சிபிஎஸ்இ அறிவிப்பு சரியே என்றும் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.