பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன்  ஓய்ந்ததை தொடர்ந்து பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில்  வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுக்கப்படுவதை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் தேர்தல் ஆணையம் திருப்திகரமாக உள்ளது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.166 கோடி ரொக்கமும், மற்றும் இதர தேர்தல் தொடர்பான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

தேர்தல் தொடர்பாக கர்நாடகாவில் இதுவரை எந்த வன்முறையும் நடைபெறவில்லை என்றும், ஆனால் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 20 சதவிகிதம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது, அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மாநிலம் முழுவதும்  82,157 போலீஸ் மற்றும் ஹோம் கார்ட்ஸ்களும், 585 மத்திய படையினரும்  வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 7ந்தேதி 125 கோடி ரூபாய் மற்றும் ஏராளமான மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.