காத்மாண்டு,
லகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ளார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாள அதிபர் வித்யா தேவி உடன் பிரனாப்
நேபாள அதிபர் வித்யா தேவி உடன் பிரனாப்

நேபாள  தலைநகர் காத்மாண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவரை, நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி வரவேற்றார். பின்னர், அதிபர் மாளிகையில் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, நேபாளத்தில் நாடாளுமன்றம் மூலம் புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டு வந்ததற்கு வித்யா தேவிக்கும், நேபாள மக்களுக்கும் பிரணாப் முகர்ஜி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நேபாள துணை அதிபர் நானா பகதூர் புன்னையும் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.
மாலையில், பிரணாப் முகர்ஜிக்கு நேபாள அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:
நேபாள பிரதமர் கே.பி.சர்மா உடன் பிரனாப்
நேபாள பிரதமர் கே.பி.சர்மா உடன் பிரனாப்

இந்தப் பிராந்தியத்தில் அமைதியான சூழலுக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதே 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இருக்கும் பொதுவான சவாலாகும்.
உலகின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது.  அதை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.
இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
பிரணாபின் நேபாள வருகையையொட்டி, நேபாளம் முழுவதும் நேற்று  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.