சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சென்னை அண்ணா சாலையில்  பழைய கட்டிடம்  இடிக்கும் பணியின்போது, இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சிக்கிய நிலையில், ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம்பெண் வங்கி ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை அண்ணா சாலை சென்னை ஆயிரம் விளக்கு அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்ற வந்தது. இன்று காலை ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்ற வந்தது. முறையான பாதுகாப்பு இல்லாமல் இடிக்கப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து தெரியாமல், அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது  சுவர் இடிந்து விழுந்தது.

இடிந்த சுவரின் இடிபாடுகளில் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த 2 பெண்கள் சிக்கினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்ளில் ஒருவரான  வங்கியில் பணிபுரியும் இளம்பெண் பிரியா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த   விபத்தின் காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டடம் இடிக்கும் பணிகளை மேற்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.