சென்னை: திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் உள்பட பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் நேற்று (ஜனவரி 26) காலமானார். இவர்,  1966ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்‘ திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சி மாஸ்டராக அறிமுகமானவர்  ஜூடோ ரத்தினம். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். குறிப்பாக திரை ஜாம்பவான்களாக திகழ்ந்த  எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர்  ,  சிவாஜி , ரஜினி, கமல்  ஹாசன் மற்றும் நடிகர்கள் அர்ஜுன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.  அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு ஜூடோ ரத்னம் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்ற ஜூடோ ரத்னம், போக்கிரி ராஜா, தலைநகரம் போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.  தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் ஜூடோ ரத்னம். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது பொதுவுடைமைக் குறிப்பிடத்தக்கது. கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள ஜூடோ ரத்னம் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம், சில வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமின்றி, 9 மொழிகளில் 1200 படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் ஸ்டண்ட் இயக்குநராகவும், தர்ம தேவதை, ஈட்டி உள்ளிட்ட நான் நடித்த படங்களுக்கும் பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு. ஜூடோ ரத்தினம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த், ஜூடோ ரத்னம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ரஜினிகாந்த, ஜூடோ ரத்னத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்னம். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போதும் கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார்; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்தார்.