கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஹைதராபாத்தில் உள்ள 44 மருத்துவமனைகள் மீது எழுந்த புகாரை அடுத்து தெலுங்கானா சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை மூலம் ரூ. 1.61 கோடி திரும்ப தரப்பட்டது.

44 மருத்துவமனைகள் குறித்து 87 புகார்கள் வந்ததாகவும் அதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் ரூ. 1.61 கோடி கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் செக்கந்தராபாத்தைச் சேர்ந்த ராபின் சசிசேஸ் என்ற சமூக ஆர்வலர் கேள்வியெழுப்பியதை அடுத்து இந்த விவரம் தெரியவந்துள்ளது.

17 மருத்துவமனைகள் 3 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளன. அதிகபட்சமாக குகட்பள்ளியைச் சேர்ந்த ஆம்னி ஹாஸ்பிடல் 27,41,948 ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளது.

இந்த மருத்துவமனைகள் மீது மேற்கொண்ட நடவடிக்கை மூலம் 2021 ஜூன் 22 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட மொத்தம் 1,61,22,484 ரூபாய் உரியவர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டதாக அந்த தகவலில் தெரிவித்துள்ளது.