பாட்னா:

மாமனாரை எதிர்த்து சரன் மக்களவை தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என்று தெரிகிறது.


சரன் மக்களவை தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த தொகுதியில் போட்டியிட தேஜ் பிரதாப் யாதவ் விரும்பினார். இந்நிலையில், கட்சித் தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் தேஜஸ்வி யாதவ், சரன் தொகுதிக்கு சந்திரிகா ராயை வேட்பாளராக அறிவித்தார்.

தம்பியின் செயல்பாட்டால் அதிருப்தியடைந்த தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது மாமனாரான சந்திரிகா ராயை எதிர்த்து சரன் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரன் தொகுதியில் போட்டியிட சீட் தராதது, தன்னை அவமதித்த செயல் என நினைத்து தேஜ் பிரதாப் யாதவ் ராஜினாமா செய்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சரன் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் தெரிவித்தனர். எனினும் தேஜ் பிரதாப் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

சந்திரிகா ராயின் மகளும் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தியுமான ஐஸ்வர்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் தேஜ் பிரதாப் யாதவ்.

அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் தேஜ் பிரதாப் யாதவ் மனு தாக்கல் செய்துள்ளார்.

விவகாரத்து மனுவை வாபஸ் பெறுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியதை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.