சென்னை; டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனை  மற்றும் விசாரணைக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை ( 22ஆம் தேதி )   விசாரணைக்கு வரவுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை அடுத்தடுத்து சோதனைகள் நடத்தி வருகிறது. இந்த சோதனை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக, திரைப்பட தயாரிப்பாளர் பாஸ்கரன் மற்றும் திமுக நிர்வாகி ரத்தீஸ் என்பவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.

 முன்னதாக, சோதனை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிறுவனமும் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தும், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு அனுமதி அளித்தும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்.23-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்கில் முறைகேடு நடத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச்சில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதில், டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அமலாக்கத்துறை சோதனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான நீதிபதிகள் குறித்தும் சர்ச்சை எழுந்தன. இதையடுத்து, முதலில் விசாரித்த நீதிபதிகள் வழக்கில் இருந்து விலகிய நிலையில், வேறு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.

முன்னதாக  டாஸ்மாக் மீது இ.டி. நடத்திய சோதனைகளுக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு மாநிலத்தில் உள்ள மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ஏப்.4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியது.  இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால்,  ஏப்.8-ம் தேதி தமிழக அரசு மற்றும் டாஸ்ஆக் நிர்வாகத்தின் மனுக்களை வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதித்திருந்தது. அவை திரும்பப் பெறப்பட்டதாக தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடியதுடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு பச்சைக்கொடி காட்டியது.

வழக்கின் விசாரணையின்போது,  இந்தச் சோதனைகளின்போது அமலாக்கத்துறை   பல மணி நேரம் அதிகாரிகளைத் தடுத்து வைத்து துன்புறுத்தியதாக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவாக சோதனைகள் நடந்ததாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்,  தேடுதல் சோதனைகளை நடத்துவதற்கு முன்பு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற முன்நிபந்தனைக் கான வாதம் முற்றிலும் நியாயமற்றது மற்றும் மனசாட்சி இல்லாதது என்றும் நீதிமன்றம் கூறியது.  அதேவேளையில், குற்றவாளிகள் எதிர்பாராத வகையில் பிடிபடுவதை உறுதி செய்வதற்காக ஒரு புலனாய்வு நிறுவனத்தின் சோதனை அல்லது தேடுதல் சோதனை புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து கூறியது.

அதாவது,  பணமோசடி தடுப்புச்சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை தனது நடவடிக்கையைத் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றமானது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மூன்று நாள்களுக்கு அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகனின் வீடு, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோரின் வீடுகள் உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

பின்னர், விசாகனை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சோதனையும், விசாரணையும் தொடர்ந்தது. இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் கடந்த திங்கள்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை

கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? முக்கிய நபரான ரத்தீஷ்  தலைமறைவு – வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’