சென்னை: டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீடு அருகே கிழிந்த நிலையில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராக டாஸ்மாக் அதிகாரிகள் சிலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அதிகாரிகள் அஜராகாமல் டிமிக்கி கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று (மே 16ந்தேதி) அன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருந்தார். ரித்திஷ்தான் டாஸ்மாக் இயக்குனர் விசாரணை வழிநடத்தியதாக கூறப்படுகிறது.
இதேபோல் ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் அன்பில் மகேஸின் உறவினரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை, சூளைமேடு, கல்யாண புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில் டாஸ்மாக் MD விசாகன் வீட்டின் அருகே கிழிந்த நிலையில் ஆவணங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாகனின் வீட்டிற்கு அருகே கிடந்த 20க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட WHATSAPP CHAT நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். விசாகனின் மகனிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 8 மணி நேரச் சோதனைக்குப் பிறகு, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர். மேலும், விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்? டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்? உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்? டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ? Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை. இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா? ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்…. So, Sketch உதயநிதிக்கா? #யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த “சார்” யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!