சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், திமுக வேட்பாளர் ஒருவர் தெருநாய் மீது ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் பிரசாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அவர்மீது  விலங்குகள் வதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் ( 19ஆம் தேதி) நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்று மாலை 6மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் ஒருவர் தெருநாய் மீது, தனக்கு ஆதரவு கோரும் ஸ்டிக்கரை ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தஞ்சாவூர் கரந்தை பகுதியில் நாலாவது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுமதி இளங்கோவன் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம் தான் ஒரு தெருநாய்  மீது ஒட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ அந்த பகுதியில் வைரலானது. ஸ்டிக்கர் ஒட்டியதால், அந்த நாய் அதை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. தரையில் படுத்து புரண்டு அதை அகற்ற முயற்சித்து வருகிறது. ஆனால், ஸ்டிக்கர் வலிமையாக உள்ளதால், அது கீழே விழாமல்உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை காணும் நெட்டிசன்களும், வன விலங்கு ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிலர் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க ஆட்கள் கிடைக்கவில்லை போல, அதனால்தான் நாய் மீது ஸ்டிக்கர் ஒட்டி வாக்கு சேகரிக்கிறது என்றும், விலங்கு ஆர்வலர்கள், நாய் மீது ஸ்டிக்கர் ஒட்டிய வேட்பாளர் மீது விலங்குகள் வதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.