பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி 2 -வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சித்து ரெட்டி (tவயது 62),  இன்று காலை மாரடைப்பால்  உயிரிழந்தார். இதையடுத்து அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பவானி மாவட்டத்தில் அத்தாணி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட,  3-வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன்  மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இன்று அம்மாபேட்டை பேரூராட்சியில் மேலும் ஒரு திமுக வேட்பாளர் உயிரிழந்தது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2016-ல் இருந்து ஒத்தி வைக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடைபெறுகிறது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு  பிப்ரவரி மாதம்  19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதன் காரணமாக வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த உமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான  கெங்குரெட்டி மகன் 62 வயதான சித்துரெட்டி என்பவர், அம்மாபேட்டை பேரூராட்சி, 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் தேர்தல் பிரசாரத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்த நிலையில்,  இன்று காலை (வியாழக்கிழமை)  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதையடுத்து அவரது உறவினர்கள் அருகே பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்ல வலியுறுத்தினர். அதையடுத்து, அங்கிருந்து ஈரோடு மருத்துவமனைக்குசெல்லும் வழியில் சித்துரெட்டி உயிரிழந்தார்.

திமுக வேட்பாளர் உயிரிழந்ததால் இந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.