நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

சுதந்திரம் வாங்கித் தந்தோம் என்று சொல்லி சொல்லியே அசைக்கமுடியாத பலத்துடன் நாடுமுழுவதும் உலாவந்து காங்கிரஸ் கட்சி..

அப்பேற்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை நாட்டிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வீழ்த்தியது.

அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகதான் 1967-ல் நாடே வியக்கும் அந்த சாதனையை படைத்தது.

இந்தியா முழுவதும் இருந்த பிராந்திய கட்சிகள் தங்களின் தலைமைப் பீடமாக திமுகவை கருதுமளவுக்கு அண்ணாவின் திமுக அப்படி ஒரு எழுச்சியை கிளறி விட்டிருந்தது.

ராஜ்யசபா எம்பி பதவியை வகித்து வந்த அண்ணா அதனை அப்படியே தொடர்ந்து வகித்து வந்து மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தி இருப்பாராயேனால் வரலாறு மாறிப்போயிருக்கலாம்.

நாவலர் நெடுஞ்செழியன் போன்ற அப்பிராணிகளிடம் தமிழக ஆட்சியை ஒப்படைத்து இருந்தால், அண்ணா கவலையே இல்லாமல் ஒரே நேரத்தில் மத்திய மாநில அரசியல் என இரட்டை சவாரி செய்திருக்கலாம் பிரச்சனை வந்திருக்காது..ஆனால் அண்ணா அதனை செய்யத் தவறிவிட்டார்.

ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜருக்கு பிரதமராகும் வாய்ப்புகள் அமைந்தபோது அதனை விட்டுவிட்டு கிங்மேக்கர் என்ற அளவிலேயே நிறுத்திக்கொண்டார். தன்னை விட வயதில் மிகவும் குறைந்த இந்திராகாந்தியையெல்லாம் பிரதமராக்கி, கடைசியில் அவராலேயே அரசியலில் காலி செய்யப்பட்டு நொந்து போய் இறந்து போனார் காமராஜர்.

அண்ணாவுக்குப் பிறகு முதலமைச்சரான கலைஞர்கூட அப்போது நாடு இருந்த நிலையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி இருக்கலாம்..கலைஞரும் முதலமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்ற அளவோடு இருந்துவிட்டார். எம்ஜிஆருக்கும் தேசிய அரசியலில் என்ற குதிப்போம் எந்த அளவிற்கு தைரியம் கிடையாது..

ஆனால் ஜெயலலிதாவுக்கு அந்த துணிச்சல் இருந்தது.. தமிழகத்தில் இருந்தே தேசிய தலைவர்களை அவர் ஆட்டிவைத்த விதம் பல நேரங்களில் கிறுகிறுக்க வைத்தாலும் ஆச்சரியப்படும்படியே இருந்தது. நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி என்ற அளவில் அண்ணா திமுகவை கொண்டுபோய் அவரால் நிறுத்த முடிந்தது..

மூப்பனாருக்கு கூட அதிர்ஷ்டவசமாக பிரதமர் ரேசில் ஒரு வாய்ப்பு வந்தது.. ஆனால் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக கூடாது என்று நம்மவர்களே வெச்சி செய்துவிட்டார்கள்..

ஆனால் தேவகவுடா, குஜ்ரால் போன்றவர்களெல்லாம் பிரதமராக ஆனதை பார்க்கும்போது…

மேலே நாம் கூறியதையெல்லாம் யோசித்துப் பார்க்க வைக்கிறது