நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

டந்த சில நாட்களாக நண்பர்கள் வட்டாரத்தில் சிலர் கடன் கேட்டு அலைவதை காண நேர்ந்தது. விசாரித்தபோது தனியார் பள்ளியில் மகனுக்கோ மகளுக்கோ கல்விக்கட்டணம் செலுத்த வேண்டுமென்று சொன்னார்கள்.

பிப்ரவரி முதல் வாரத்திலேயே என்னைய்யா கல்விக்கட்டணம் என்று கேட்டபோது, அடுத்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை இப்போதே செலுத்திவிட வேண்டும் என்றார்கள்.. அதுவும் எவ்வளவு? அறுபதாயிரம் எழுபதாயிரம்.. ஒருவேளை நமக்கு விஷயம் புதிதாக இருந்திருக்கலாம் அதனால் தலையே சுற்றியது..

இவர்களில் நண்பரின் நகையை வாங்கி வங்கியில் அடகு வைக்க ஓடியவர்களில் என் நண்பரும் ஒருவர்.

இதைவிட அதிர்ச்சியான இன்னொரு சமாச்சாரமும் உண்டு. பணத்தைப் புரட்டிக்கொண்டு வந்த அவர் பள்ளியில் காட்டுவதற்கு பட்டபாடு.. கடைசி நாள் என்பதால் அவ்வளவு கூட்டமாம்..

9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிக்கு பிப்ரவரி முதல் வாரத்திலேயே இப்படி ஆண்டு கட்டணம் வசூலாம்..

மிக மிக மிக குறைந்த அளவில் கணக்கீடு என்றாலும் 500 மாணவ மாணவியர் ஆவது தேறுவார்கள்.. சராசரியாக தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வசூல் என்றால் இரண்டரை கோடி ரூபாய்..

அடுத்த கல்வியாண்டில்பள்ளி திறக்கப்படும் முன்பே இந்த இரண்டரை கோடி ரூபாய், சில லட்சங்களை வட்டியாக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றுத் தந்துவிடும்

ஆனால் மாணவரின் பெற்றோர், வாங்கிய தொகைக்கு நான்கு மாதங்களுக்கு வெளியே காட்ட வேண்டிய வட்டி பல லட்சங்களை தாண்டும்..

ஒரு ஊரில், ஒரு பள்ளியிலேயே இவ்வளவு என்றால் ஒவ்வொரு ஊரிலும் எத்தனை பள்ளிகள், தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பள்ளிகள் ..!!

நாம் கூட்டியும் சொல்லவில்லை குறைத்தும் சொல்லவில்லை சராசரியை தான் சொல்கிறோம் தமிழகம் முழுவதும் இப்படி நான்கு மாதங்களுக்கு முன்பே பெற்றோரிடம் பறிக்கப்பட்ட தொகை எத்தனை கோடிகள் வரும்?.. நீங்களே கணக்குப் போட்டு பாருங்கள்