கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் பின்னணி தெரியாது.
நெட்டிசன்: 
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
பல விஷயங்களை பிரமிப்போடு கடந்திருப்போம். ஆனால் அதன் பின்னால் இருப்பவர்கள் இவர்களா என்று தெரியவரும்போதுதான் வியப்பு ஏற்படும்.
நாகூர் அனீபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.. இஸ்லாமியர்களுக்கு மட்டும், அதன் இசைவடிவத்திற்காக எல்லா மதத்தினரும் ரசிக்கக்கூடிய பாடல், காலத்தை வென்ற காவியம் இந்த பாடல் என்பது பலருக் கும் தெரியும். ஆனால் பாடலுக்கு மெட்டு போட்டவர். எஸ்.வி.வெங்கட்ராமன் என்பவர். இந்த தகவலை என்னிட மூத்த பத்திரிகையாளர் அண்ணன் துரைக்கண்ணு சொன்னபோது வியப்பாக இருந்தது.
சோழவந்தானில் பிறந்த வெங்கட்ராமனை. பழைய திரைப்பட பாடல்களை கேட்கும்போது எங்கெல்லாம் கடக்கிறோம் என்று பிளாஷ்பேக் மோடுக்கு போனாமால் அட ஆமால்ல என்று வியப்புதான் மேலோங்கும். மீரா படம் வெளியாகி 79 ஆண்டுகள் ஆகின்றன… படத்தில் எஸ்வி வெங்கட்ராமன் இசையமைத்து எம்எஸ்சுப்பு லட்சுமி பாடியபடி நடித்த, அந்த ”காற்றினிலே வரும் கீதம் பாடல்” இன்னமும் என்னமாய் பாடாய்படுத்துகிறது செவிகளை..
மீரா படத்தில் சிறுமி கண்ணனை பாடியபடியே வழிபடு வதும், அரை நிமிடம் அப்படியே காமிரா கண்ணன் முகத்தில் மட்டுமே இருக்க. பின்னணி இசை அதகளம் செய்யும். ஏராளமான வாத்தியங்களை வைத்து எஸ்விவி தெறிக்கவிட்டிருப்பார். சிறுமி மீரா அப்படியே பெரிய பெண்ணாகி எம்எஸ் சுப்புலட்சுமி முகம் வந்து பாட ஆரம்பிக்கும்.. ஒரே பாட்டில் பணக்காரனாவது வகையறா பாடல் பின்னணி இசைக்கெல்லாம் இந்த டிரான்ஸ்பேர்மே ஷன் உத்திதான் ஆரம்பப்புள்ளி என்பார்கள்.
சிவக்குமார், ஜெயலலிதா நடித்து 1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்தின் டைட்டில் பிஜிஎம்கூட மீரா படத்தின் விறுவிறுப்பான டிரான்ஸ்பேர்மேஷன் ரகமே..இந்த படத்திற்கும் இசை எஸ்வி, வெங்கட்ராமன்தான். ரீரெக்கார்டிங்கில் எஸ்விவி ஒரு மாபெரும் மேதை என்பதை அவர் இசையமைத்த படங்களை கூர்ந்து கவனித்தவர் களுக்கே தெரியும். இன்றளவும் வசனத்திற்காகவே பேசப்படும் கண்ணகி (1942), மனோகரா(1954) ஆகிய இரண்டு படங்களுக்குமே எஸ்வி வெங்கட்ராமன்தான் இசை.
நந்தனார் (எனனப்பன் அல்லவா)
வன சுந்தரி ( நமஸ்தே நமஸ்தே சுபநாளிதே )
மாமன் மகள் ( கோவா மாம்பழமே- சந்திரபாபு பாடுவார்)
மூன்றும் நம்மளோட பேவரைட்…
இருப்பினும் நம்மை பொருத்தவரை எஸ்.வி.வி இசை வரலாற்றில் ஜனரஞ்சக மைல்கல் என்றால் அது சிவாஜி நடித்த இரும்புத்திரை படம்தான். தமிழ் சினிமா உலகில் டாப் பைவ் மெலோடி டூயட் பட்டியலில் வைக்கக்கூடிய, நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று புரியுமா.. பாடல்..
ஜெமினி எஸ் எஸ் வாசன் தயாரித்த பிரம்மாண்ட திரைப்படமான இரும்புத்திரை படத்தில் அத்தனை பாடல்களும் எஸ்விவியின் திறமையை என்றென் றைக்கும் பறைசாற்றும்.. வாய்ப்பு இருப்பவர்கள் youtube- ல் சென்று பாருங்கள்..
1938 முதல் இசையைமைத்து வந்த எஸ்விவி, 60 களின் ஆரம்பத்தில் முழுவீச்ச்சில் பரிணமித்தார்.. அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே பாடல் இடம்பெற்ற அறிவாளி போன்ற படங்களை சொல்லலாம்.
விஸ்வநாதான்- ராமமூர்த்தி, ஜிகே வெங்கடேஷ்( இளையராஜாவின் குரு) ஆகியோரெல்லாம் எஸ்வி. வெங்கட்ராமனிடம் பணியாற்றிவர்கள்தான்.
சந்திரமோகன் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என நடிப்பிலும் கலக்கிய இசை மேதை எஸ்வி வெங்கட்ராமனின் 113 வது பிறந்த நாள் இன்று..