நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கரமடத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.. அதில் வேதபாடசாலை நடத்தப்பட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்..

உடனே அவரை ஒரு தரப்பினர் கடித்து குதற ஆரம்பித்துள்ளார்கள் .. வீடில்லா ஏழைக்கோ அநாதை ஆசிரமத்திற்கோ தானமாக கொடுத்திருக்கலாம், அதை விடுத்து போயும் போயும் சங்கரமடத்திற்கு தானம் கொடுப்பதா? என்று கேட்டு நக்கல் அடிக்கிறார்கள்..

இவர்களில் யார் பெரும்பாலானோர் என்று பார்த்தால் ஒரு நடிகனுக்கு பக்கா ரசிகனாக இருந்து முதல் நாள் முதல் ஷோவுக்கே 2000 ரூபாய் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டு அந்த டிக்கெட்டை இணையதளத்தில் பெருமையாக போடுபவர்கள்.

இன்னொரு தரப்பு யார் என்று பார்த்தால் அரசியல் தலைவனுக்கு பெரும் தொகையில் பேனர் வைப்பவர்கள்..

இவர்கள் நடிகனுக்கும் அரசியல் தலைவருக்கும் செய்யும் செலவில் இருபது ஏழை குடும்பங்களுக்கு வயிறார சோறு வாங்கி போடலாம்.. குறைந்தபட்சம் ஒரு பதினைந்து பிள்ளைகளுக்காவது கல்வி உபகரணங்களை வாங்கி தரலாம் என்று மற்றவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்?

உங்கள் பணம்.. உங்கள் மனதுக்கு மிக மிகப் பிடித்த விஷயம்..நீங்கள் விரும்பியபடி செலவு செய்கிறீர்கள்.. அதுபோலத்தான் எஸ் பி பாலசுப்ரமணியம் அவருடைய வீட்டை அவர் விருப்பப்பட்டு விரும்பிய இடத்திற்கு தானம் செய்கிறார்..

என்னமோ எஸ் பி பாலசுப்பிரமணி என்பவர் இதற்கு முன்பு கல்விக்கோ ஏழைகளுக்கோ பத்து பைசாகூட கொடுத்து உதவாத கஞ்சன் போல் பாவிக்கிறார்கள்.. பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனையை படைத்துள்ள அவர் ஏராளமான நிகழ்ச்சிகள் மூலம் பல சமூக சேவைகளை செய்தவர்தான்.. இன்றும் செய்து வருபவர்தான்..

இவர்களுக்கு பிரச்சனை, அனேகமாக இந்து மதமும் சங்கர மடமும் தான் இருக்கும் போல.. போகட்டும். காஞ்சி சங்கரமடம் என்ன கேபரே டான்ஸ் கிளப்பா நடத்துகிறது? நாடு முழுக்க பல கல்வி நிறுவனங்களையும் வேத பாடசாலைகளையும் நடத்துகிறது. மடத்தை மதிப்பவர்கள் மடத்திற்கு கொடுத்துவிட்டு போகிறார்கள் அது அவர்கள் சமாச்சாரம்.. ஏதாவது சட்டவிரோதமான செயல் என்றால் கண்டிக்கலாம்..

இப்படித்தான் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பெரும் தொகைகளை காணிக்கை செலுத்துபவர்களையும் கிண்டலடிக்கிறார்கள்.

திருமலையில் கையில் பத்து பைசா இல்லாவிட்டாலும் உணவு இருப்பிடம் உள்பட எல்லாமே இலவசமாக கிடைக்கும்.. திருமலை நிர்வாகம் பக்தர்களுக்காக ஏராளமான வசதிகளை செய்து கொடுக்கிறது..

இதைவிட நெஞ்சை நக்கும் செம குரூப் ஒன்று உள்ளது..ஏதாவது குப்பை மேட்டு பக்கமோ கால்வாய் பக்கமோ கிழிந்த உடைகளுடன் திரியும் சிறுவர்-சிறுமியர் படத்தைப் போட்டு இந்த நாட்டையும் சமூகத்தையும் பார்த்து ஏய் கேவலமான சமூகமே என்று பேசும்.

ஆசை தீர படுத்து பிள்ளையைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அதை வளர்க்கத் துப்பில்லாமல் போனால் இந்த சமூகம் என்ன செய்யும்? ஏதோ துயர சம்பவம் நடந்து காப்பாற்ற ஆளில்லாத சிறுவர்-சிறுமியர் என்றால் பரவாயில்லை.. விசாரித்துப் பார்த்தால் பெற்றோர் இருவருமே பொறுப்பில்லாத ரகமாக இருப்பார்கள்.

இதே சமூகத்தில்தானே கோடிக்கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக உழைத்து தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பட்டினி என்றால் என்னவென்றே தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.. விசேஷ தினங்கள் வந்தால் விதவிதமான உடைகளை எடுத்து போட்டு அழகு பார்க்கிறார்கள்.. பள்ளிக்கு அனுப்பியும் படிக்க வைக்கிறார்கள்..

எதிர்மறை விமர்சனம் வைப்பது தப்பு இல்லை. ஆனால் அது பொத்தாம் பொதுவாகவும் காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலும் இருக்கக்கூடாது..