தமிழக அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயகுமார், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் தமிழக வணிகர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும். ஆகவே  வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், “எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும்இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்  எங்கள் அணியின் விருப்பம்.  ஆனால் பேச்சு ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை இன்னமும் விவசாயிகளுக்கு தரப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.  அரசின் நிலையை புரிந்து கொண்டு விவசாயிகள் செயல்பட வேண்டும் “என்றும் ஜெயகுமார் கேட்டுக்கொண்டார்.

தமிழக அமைச்சரே அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்டது  அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையை மாற்ற அரசு என்ன நடவடிக்கை வைத்திருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.