சென்னை: ஊர் கூடி உயர்த்துவோம் தென் சென்னையை என்று அழைப்பு விடுத்துள்ள தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,  அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 4முனை போட்டி நிலவி வருகிறது. தென்சென்னையில், திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து, பாஜக வேட்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும், அதிமுக சார்பில்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகின்றனர். இங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது

இந்த நிலையில், தென் சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன், , அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில்  பாஜக தேர்தல் அறிக்கையை வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தென்  சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம் கொண்டு வரப்படும்,  தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்,   மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்  கொண்டு வரப்படும்,  தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம், பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சனை,  பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். * 6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும். * மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது,  வேட்பாளர் தமிழிசையுடன், பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் கரு.தியாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள  முக்கிய அம்சங்கள்:

  • சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி ஆற்றுநீரை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மத்திய நீர்வள அமைச்சகம் மற்றும் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து தென்சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மொத்தம் 25 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்படும்.
  • மிகப்பெரிய அளவில் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்படும்.
  • விருகம்பாக்கம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு (First responders project), முதல் பதிலளிப்போர் முற்றம் (First responders yard) உருவாக்கப்படும்.
  • மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய வழித்தடத்தில் மெட்ரோ-3 திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து தென்சென்னை தொகுதிக்குள் வட்ட/ லூப் வழித்தடங்கள் தொடங்கப்படும். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் இந்த வழித்தடங்களில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • வடபழனி, திருவான்மியூர், தி நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
  • வேளச்சேரி-பரங்கிமலை (செயின்ட்தாமஸ் மவுண்ட்) இடையேயான பறக்கும் ரயில் வேளச்சேரி திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை – கடலூர் இடையே கடல் வழி போக்குவரத்து ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
  • அம்மா உணவகங்கள் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.
  • சைதாப்பேட்டை, மாம்பலம் ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும்.
  • சோழிங்கநல்லூரில் புதிதாக மிகப்பெரிய பன்னோக்கு ESI அரசு மருத்துவமனை அமைக்கப்படும்
  • நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.
  • பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை.
  • ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
  • போதை மறுவாழ்வு மையம் ஒன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஏற்படுத்தப்படும்.
  • நவீன வசதிகளுடன் சுற்றுசூழல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்த நடவடிக்கை.
  • மடிப்பாக்கம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, நன்மங்கலம் ஏரி ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டு அங்கு படகுக் குழாம்கள் அமைக்கப்படும்.
  • எம்.ஆர்.டி.எஸ் (MRTS) நிலையங்களில் உள்ள கூடுதல் இடங்களில் மாடி தோட்டங்கள் ஆகியவை அமைக்கப்படும்.
  • மிகப்பெரிய மீன் சந்தை அமைக்கப்படும்.
  • மீனவ கிராம பெண்களுக்கு மீனவ அக்கா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வங்கிக் கடன்கள் கிடைக்க நடவடிக்கை.
  • தென் சென்னையின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பணி செய்யும் மகளிருக்கான விடுதி அமைக்கப்படும்.
  • இளம்பெண் அரசியல்வாதிகள் ஊக்கப்படுத்தும் திட்டமாக “வீரப் பெண் திட்டம்”
  • பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும்.
  • கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்களுக்கு இலவச தங்கும் அறை, மலிவு விலை உணவகம் ஏற்படுத்தப்படும்.
  • எம்.பியாக பெரும் ஊதியம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்க செலவிடுவேன்.
  • தென் சென்னை தொகுதியில் இளைஞர் நாடாளுமன்றம் உருவாக்கப்படும்.
  • சென்னை சவுத் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
  • அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பிரத்தியேக விளையாட்டு அரங்கம் 2027க்குள் பெரும்பாக்கத்தில் அமைக்கப்படும்.
  • நீட் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கான இலவச பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி தரப்படும்.