புதுக்கோட்டை:  “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது, இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது”  என  Village Cooking Channel வேதனை தெரிவித்துள்ளது.

தங்களுக்கு உதவிய ராகுல் காந்தி குறித்து, தங்களையே பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பிரபல வில்லேஜ் குக்கிங் யூட்டூப் சேனல் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில், பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலில் சமைக்கும் பெரியதம்பி தாத்தாவிற்கு இதய நோய் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். இவரை வைத்து செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்,  வில்லேஜ் குக்கிங் சேனலின் பெரியதம்பி தாத்தாவின் மேல் சிகிச்சைக்காக உதவி செய்ய கோரி, ராகுல்காந்தியை நாடியதாகவும், ஆனால்,  ராகுல் அதை புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல் காலத்தில், அதாவது,  2021-ம் ஆண்டு ஜனவரியில் வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகிகளை ராகுல்காந்தி   நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுடன் இணைந்து சமையல் செய்தும், உணவை சாப்பிட்டும் மகிழ்ந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது (2022-ல்)  வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த பெரியதாத்தா உள்பட அனைவரும், ராகுலை மீண்டும் சந்தித்துடன், ராகுலுடன்  நடைபயணம் மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்களும் வைலானது.
இந்த நிலையில்,  தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல்காந்தியின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில், வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பில் இருந்து, பெரியதம்பி தாத்தாவின் இதய சிகிச்சைக்கு ராகுல் காந்தியிடம் உதவி கேட்டனர் என்றும், அதற்கு ராகுல் காந்தி, ’இப்படியெல்லாம் என்னை தொந்தரவு செய்யக்கூடாது’ என்று கராராக கூறிவிட்டார் என்றும்கூறி சமூக வலைதளத்தில்  வீடியோ ஒன்று வைரலானது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  அந்த வீடியோ முற்றிலும் பொய்யானது என்றும் இப்படி வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் வில்லேஜ் குக்கிங் யூ-ட்யூப் சேனல் தரப்பினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இது குறித்து  வில்லேஜ் குக்கிங் சேனலின் சுப்ரமணியன் வேலுச்சாமி என்பவர், தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ”இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!” என்று பதிவிட்டுள்ளனர்.

வில்லேஜ் குக்கிங் சேனல் எனப்படும் சமையல் நிறுவனம்,   கடந்த 2018-ல் உருவாக்கப்பட்ட யூ-ட்யூப் சேனல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களால் இது உருவாக்கப்பட்டது.   இந்த சேனலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருப்வவரும் சமையல் குருவான  பெரியதம்பி என்ற தாத்தா.  இவர் சமையல் ஆர்வமுள்ள இளைஞர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு மண் மனம் மாறாத கிராமத்து சமையலை செய்துவந்தார் தாத்தா. இவர்களின் சமையல் வீடியோக்கள்யாவும், தற்போது மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.