சென்னை: தமிழ்நாட்டின் விலங்குகளுக்கான முதல்  மயானம் சென்னையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை வில்லிங்டன் கார்ப்பரேட் அறக்கட்டளை (CWCF)  தலைவர் எல் கணேஷ் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை வேளச்சேரியில் உள்ள புளூ கிராஸ் ஆஃப் இந்தியா நிறுவன வளாகத்தில் பிரத்யேக விலங்குகள் சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பான வில்லிங்டன் கார்ப்பரேட் அறக்கட்டளை (CWCF) புளூ கிராஸ் ஆஃப் இந்தியா வுடன் இணைந்து இந்த மயானத்தை உருவாக்கி உள்ளது.

ரூ.57லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மயானத்தில், இறந்த செல்லப்பணிகளின் உடல்கள் தகனம் செய்யும் வகையில் மின்தகன மேடை மற்றும் பிரார்த்தனை அரங்கமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தகனச்சடங்குகள் தொடங்கும்முன் வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்காக பிரார்த்தனை செய்யக்கூடிய ஒரு மண்டபமும்  தகன அறைக்குள் உள்ளது. இதை உபயோகப்படுதத புளூ கிராஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தகனம் செய்ய ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கிறது.

மேலும், தங்களது செல்லப்பிராணிகளை தகனம் செய்ய மக்கள் ஆன்லைனில் bit.ly/animalcremation இல் ஸ்லாட்டை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைவாசிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தங்களை பாதுகாக்கும் செல்லப் பிராணிகள் இறக்கும்போது, அவற்றை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ திண்டாடி வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் மயானத்தில் ஒரே நேரத்தில் ஏழு நாய்களை தகனம் செய்ய முடியும் என்றும்  அதில் இருந்து புகை ஏதும் வராது என்று, மின் மயான நிர்வாகி தெரிவித்து உள்ளார்.

மேலும்சிறிய அளவிலான புகை வெளியேறினால் அதை வெளியேற்றும் வகையில், “கூடுதல் நடவடிக்கையாக,100 அடி புகைபோக்கி அடுக்கையும் அமைத்துள்ளதாகவும்,  இங்கு இரண்டு உலைகள் உள்ளன, ஒன்று ஆறு செல்லப்பிராணிகளுக்கு (75 கிலோ வரை) இடமளிக்கக்கூடிய பெரியது, மற்றொன்று ஒரு செல்லப்பிராணிக்கு இடமளிக்கும், எனவே இது ஒரு நேரத்தில் ஏழு செல்லப்பிராணிகளை வைத்திருக்க முடியும்.

இந்த தகன மேடையில் வைக்கப்படும் செல்லப்பிராணிகள் தகனம் செய்யும் செயல்முறை ஒரு மணிநேரம் எடுக்கும், மேலும் உரிமையாளர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், சாம்பல் ஒரு கலசத்தில் ஒப்படைக்கப்படும், ”என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகர ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,  கண்ணமாபேட்டை அல்லது தண்டையார்பேட்டையில்  இதேபோன்ற வசதி சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்றார்.