சென்னை: தமிழக அரசியல் கார்ப்பரேட் தொழிலாக மாறிவிட்டது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தின்போது வேதனையுடன் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. சுமார் 60 தொகுதிகளில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும்,  கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் சரத்குமார் வாக்கு சேகரித்து வருகிறது.

சென்னை துறைமுகம் தொகுதியில் சமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிச்சா ரமேஷை ஆதரித்து,  சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூக்கடை அருகே உள்ள சவுகார்பேட்டை, யானை கவுனி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த சரத்குமார் அங்குள்ள டீ கடையில் அமர்ந்து, உள்ளூர்வாசிகளிடம் பேசியபடி டீ குடித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்,  தமிழகத்தில் 52 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும்  திராவிட கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது.  இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிப்புகள் வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் வாய்ப்பு கொடுத்தால்  ஊழலற்ற சிறந்த ஆட்சியை தங்களால் தர முடியும் தங்களது தொழில் சினிமா என்றாலும், மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தி, சேவை செய்து வருகிறோம் என்றவர், தமிழக  அரசியல் கார்ப்பரேட் தொழில் போல மாறிவிட்டது என வேதனை தெரிவித்தார்.

வருகிற 25ம் தேதி கோவையில் கமலஹாசனுக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.