சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 9வது மெகா தடுப்பூசி முகாமில் 8லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தி, மாநிலம் முழுவதும் 50 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நிலையில், 9வது தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த மெகா முகாமில்,  8 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், பொதுமக்கள் திரண்டு வந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23 மாவட்ங்களில் சீரற்ற காலநிலையை நிலவி வந்த நிலையில், அதை எதிர்கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்களுக்கு  நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  நேற்று மட்டும் (வியாழக்கிழமை 8,36,796 பேர்  தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும்,  இதில், 3,36,468 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 5,00,328 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் பெற்றனர் என தெரிவித்து உள்ளார்.