சென்னை: ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் திற்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில் தமிழகஅரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தமிழகம் கர்நாடகா இடையே காவிரி, மேகதாது பிரச்சினை மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார்  தமிழகத்துக்கு எதிராகவே பேசி வருகிறார். மேகதாது அணையை கட்டுவோம் என்பவர், காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என அடம்பிடித்து வருகிறார். மேலும், மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும்,  தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மற்றும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது இரு மாநில உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று அமைச்சர் துரைமுரகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, அவர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இநத் நிலையில்,  ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்திற்குரிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,  ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தி இருப்பதடன், மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.