சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப் பெரியாறு அணையால் வெள்ள அபாயம் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை கொண்டு உள்ளனர். இந்தக் கடினமான கால கட்டத்தில், நாங்கள் உங்களுக்குத் துணை நிற்போம்.
மக்களின் துயர் துடைக்கத் தேவையான உதவிகளைச் செய்வோம். அந்த வகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்குத் தமிழகத்தின் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். வெள்ள நிவாரணப் பொருட்களைத் தடையின்றி விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அணையின் நீர்மட்டத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எங்களின் அதிகாரிகளும் தொடர்ந்து கேரள மாநில அரசுடன் இது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்றனர். இன்று, அக்டோபர் 27 ஆம் தேதி காலை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2300 கன அடி நீர்வரத்து உள்ளது.
நீர்வரத்தின் அடிப்படையில் வைகை அணைக்குத் தொடர்ந்து அதிகபட்ச அளவிலான நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று காலை 8 மணி முதல் வைகை அணைக்கு விநாடிக்கு 2300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. அதேபோல் மத்திய நீர் ஆணையத்தின் விதிகளின் படியும் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் பேசி உள்ளேன். அணையில் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கூர்ந்து கவனிக்குமாறும், அணையிலிருந்து நீர் வெளியேற்றத்தை முறையே திட்டமிட்டுச் செயல்படுத்துமாறும் வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.