சென்னை: தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், முதல் பட்ஜெட் ஆகஸ்டு  13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து,  ஆகஸ்டு 16ந்தேதி  முதல் 19-ம் தேதி வரை பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெற்றது.
ஆகஸ்டு   23ந்தேதி முதல் சட்டம்ன்றத்தில்  மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நீர்வளத்துறை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது. இன்று  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இன்று நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வந்தன.  இந்த விவாதத்தின் இறுதியில் பதில் அளித்த அத்துறை அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளார்.

முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.