லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்று நிலவி வருவதால், சாலைகளில் உள்ள தார்கள் உருகி வாகனங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளதுடன், போக்குவரத்து சிக்னல்களும் வெப்பத்தினால் உருகி விளக்குகளை மறைத்து வருவதால், பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் சேவைகளும் முடங்கி இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வரலாறு காணாத வகையில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 40டிகிரி செல்சியல் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதிகரித்துள்ள வெப்பதால், கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் ரெட் அலர்ட்டும் விக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்ட வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியது. அதன் காரணமாக பல இடங்களில் பள்ளிகள், மற்றும் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன.

கடுமையான வெப்பம் காரணமாக கடந்த 11-ந் தேதி லண்டனின் விக்டோரியா நகரில் உள்ள ஒரு மரக்கட்டையினால் ஆன ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தால் தானாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிக  வெப்ப உஷ்ணத்தால்  சில இடங்களில் இரும்பு தண்டவாளங்களும் வளையும் அளவுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெயில் காரணமாக ரயில்வே சிக்னல்களில்  உள்ள விளக்குகள் உருகி வருவதால், சிக்னல்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால், பல இடங்களில் ரயில் சேவையும் முடங்கியது. மேலும் சாலைகளில் உள்ள தார் உருகி வருவதால், அதில் செல்லும் வாகனங்களில் தார் படித்து வாகனம் இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால், இங்கிலாந்து அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை தவிர்த்து விடுங்கள், உங்கள் வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள். பயண திட்டங்களையும் மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தி உள்ளது.  ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் அதீத வெப்பத்தால் உபகரணங்கள் செயலிழப்பு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால், செல்போன் சேவை, மின்வெட்டு ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு அதிகப்படியாக 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஆனால், தற்போது 40 டிகிரி செல்சியஸை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.