சென்னை

ருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு இடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள்களை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

ஜூன் 3 ஆம் தேதி அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டது..

இந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் இரு வாரங்கள் கழித்துத் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.

எனவே கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்திலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72லட்சம் மாணவ மாணவியர்களும், 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் இதனால் பயன்பெற உள்ளனர்.