சென்னை: பாஜகவில்  இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா மீண்டும் பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு மாநில பாஜகவின்  ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர் பதவி  அளிக்கப்பட்டு உள்ளது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, இவர் கடந்த 2002ம் ஆண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இதனால், அவருக்கு பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.  ஆனால், சில மாதங்களில், கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரண் இடையே மோதல் போக்கை கடைபிடித்தார். இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் சூர்யா சிவா, டெய்சி சரண் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர், சமாதானமாகச் செல்வதாக இருவரும் ஒன்றாகப் பேட்டியும் அளித்தனர். இருப்பினும், ஆடியோவில் அவதூறாகப் பேசியதை சுட்டிக்காட்டி, சூர்யா சிவாவை 6 மாத காலத்துக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.

இதையடுத்து 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம்,, பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்தார்.  இந்த நிலையில், சுமார் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் இணைந்துள்ளார். மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து, பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு மீண்டும்,  பாஜக  ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளத.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சூர்யா சிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.