டில்லி

மைச்சர் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

அமலாக்கத்துறையா; சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையிலிருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது என்று கூறி, அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி,

”செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிவிட்டதால், காவல்துறை காவல் கோரும் அவகாசம் காலாவதி ஆகிவிட்டது. எனவே இனி நீதிமன்ற காவலை மட்டுமே விதிக்க முடியும். நீதிமன்றத்துக்கு வழக்கு வந்த பிறகு 2 மாதங்கள் கடந்து விட்டால், கடந்த நாட்கள் கடந்தது தான். நீதிமன்ற காவலில் இருக்கும் நபரை விசாரிக்கக்கூடாது என்பதில்லை. முறையாக விண்ணப்பம் தாக்கல் செய்து தான் பின்பு விசாரிக்க முடியும். சட்டம் அளிக்காத விலக்கை நீதிமன்றம் அளிக்க முடியாது”

என வாதிட்டார்.

நீதிபதிகள், காவல்துறை காவல் விதிக்க முடியாதா? என கேட்டபோது, வழக்குரைஞர் முகுல் ரோத்தகி,

”15 நாட்களுக்குப் பிறகு காவல்துறை காவல் விதிக்கக்கூடாது என்பது இன்றைய சட்டமாக உள்ளது. எனவே அமலாக்கத்துறைக்குச் சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது. மருத்துவ அறுவை சிகிச்சை முடிந்து, சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு நாளில் அமலாக்கத்துறை விசாரிக்க முடியும்”

எனத் தெரிவித்து வாதத்தை நிறைவு செய்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.