டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பத்திரிகையாளர்  என்.ராம் உள்பட 9பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அநத்  மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியா உள்பட உலகின் பல தலைவர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் 2 வாரங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தியஅரசு, மவுனமான போக்கை கடைபிடித்து வருகிறது. இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி  மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம், சசிகுமார் உட்பட 9 பேர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலமான ஒட்டுகேட்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தியாவில் பேச்சு சுதந்திரத்துக்கு பெரும் சவாலாக இந்த டெலிபோன் ஒட்டுக்கேட்டு இருக்கிறது; இது சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உத்தரவிட வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏராளமானோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து, இந்த மனுக்களை விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமைநீதிபதி என்.வி. ரமணா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.