டெல்லி: முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அலோக்வர்மாக கடநத 2017ம் ஆண்டு சிபிஐ டைரக்டர் நியமிக்கப்பட்டார். அப்போது சிபிஐ துணைஇயக்குனராக இருந்தவர் ராகேஷ் அஸ்தானா. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளடைவில் ஊழல் குற்றச்சாட்டுக்களாக மாறி, ஒருவரை ஒருவர் தூற்றினர். நாட்டின் உயர்ந்த அமைப்பின் உயர்அதிகாரிகளுக்குள் நடைபெற்ற இந்த மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்திய அரசு தலையிட்டு, இருவரையும் பதவியில் இருந்துராஜினாமா செய்ய வலியுறுத்தியது. பின்னர் அவர்கள் இருவரும் பணிமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அலோக் வர்மா பணி மாற்றத்தை ஏற்க மறுத்து,  ஓய்வு பெற்றதாக கருதுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ.யை நிர்வகிக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், “வர்மா தனது உத்தியோகபூர்வ பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், சேவை விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பரிசீலனைக்கு பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இதில், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அலோக் வர்மாவின் ஓய்வூதியம் அல்லது ஓய்வுகால பலன்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பறிக்கப்படும் என்று தெரிகிறது.

அலோக்வர்மாவுடன் தகராறு செய்த மற்றொரு சிபிஐ சிறப்பு இயக்குனர், தற்போது டெல்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.