டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனி அணியை 5 – 4 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் 12 வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1928 முதல் 1956 வரை தொடர்ந்து ஆறு முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, 1960 ம் ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.

1964 ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பழி தீர்த்து மீண்டும் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி 1968 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றது.

தற்போது 41 ஆண்டுகள் கழித்து பதக்கம் வென்றிருக்கும் இந்திய அணி, இதற்கு முன் 1980 ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பின் வெற்றிப்பாதைக்குத் திரும்பி இருக்கும் இந்திய அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் வாழப்பாடி இராம. சுகந்தன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

12 வது முறையாக பதக்கம் வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணி இதுவரை 8 முறை தங்கப் பதக்கம், 1 முறை வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.