தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் தன் மீதான வழக்கை பீகார் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

“தமிழ்நாட்டைப் போன்ற ஒரு நிலையான மாநிலத்தில், நீங்கள் இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்த முடியாது” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

இது தொடர்பாக போலி வீடியோ-க்களை பதிவேற்றியதாக பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஏப்ரல் 5 ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் காஷ்யப்-பிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

இவர் மீது தமிழ்நாட்டில் 6 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது தவிர பீகாரில் 3 எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது இதையடுத்து இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பீகார் மற்றும் தமிழ்நாட்டில் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை பீகாருக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.