டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த மாத இறுதியில் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. தற்போது மூத்த நீதிபதியாக சீனியாரிட்டியில் முதலிடத்தில்  உள்ள யு.யு.லலித் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவினன் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியுள்ளது. அதன்படி கொலிஜியம் கூடி விவாதித்துள்ளது.

பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறை. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல், உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவரே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.

எனவே, சீனியாரிட்டிபடி உச்ச நீதிமன்ற நீதிபதி யுயு லலித் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் பெயரையே ரமணா சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித்  ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்க உள்ளார். பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். வரும் நவம்பர் 8ஆம் தேதி யுயு லலித் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து மீண்டும் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்.

குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதிகளால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி