இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி ரமணா இந்த மாதம் 26 ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.

இவருக்கு அடுத்த படியாக தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்கப்போவது யார் என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூடி விவாதித்தது.

இதில், நீதிபதி என்.வி.ரமணா-வுக்கு அடுத்த நிலையில் சீனியாரிட்டியில் உள்ள யு.யு.லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

64 வயதாகும் யு.யு.லலித் நவம்பர் மாதம் ஓய்வு பெறுவார் என்றும் குறைவான நாட்களே இந்த பதவியில் இருப்பார் என்றும் தெரிகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவரான லலித் 1983 ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை துவங்கினார்.

1986 ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடர்ந்த லலித் மூத்த வழக்கறிஞராக 2004 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நுழைந்தார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் ஆஜரான யு.யு.லலித், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்காக வாதாடினார்.

2ஜி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடிய யு.யு.லலித் 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு கூறிய நீதிபதி யு.யு.லலித், போக்சோ சட்டத்தில் விசாரணை மேற்கொள்ள உடலோடு உடல் உரசி உறவு வைத்ததற்கான ஆதாரம் வேண்டும் என்று ஒரு வழக்கில் கூறியது விவாதப்பொருளானது.

தவிர, வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா-வுக்கு ஒரு வழக்கில் நான்கு மாத சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் தலைமை நீதிபதி பொறுப்புக்கு தேர்வாகி இருப்பது இது இரண்டாவது முறை, இதற்கு முன் 1971 ம் ஆண்டு நீதிபதி எஸ்.எம். சிக்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டார்.