சென்னை: “பள்ளி மாணவர்களிடையே ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நடிகர் தாமு அவர்களை தேம்பி தேம்பி  அழ வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இனிமேல் தாமு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளனார்.

பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த தாமு தற்போது கல்வி சேவைகள் செய்துவருகிறார்.  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேசி, அவர் களை மோடிவேட் செய்து வருகிறார். இதனால், பல பள்ளிகளில், அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைக்கிறார்கள்.

நடிகர் தாமு, கடந்த 2011ம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கவதாக கூறி  தொடங்கிய அமைப்புதான் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவை (IPTSA). இந்த அமைப்பில் 1 லட்சம் பேராசிரியர்களும், 30 லட்சம் பெற்றோர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் தரமான மாணவர்களை உருவாக்குவதாக கூறி, தாமு அவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். சமீபத்தில்,  சேலத்தில் பள்ளி மாணவிகளிடம் பேசினார். அவரது உரையைக் கேட்டு  மாணவ மாணவிகள்  தேம்பி அழும் காணொளிகள் வைரலானது. இதை வைத்து தற்போது சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது.

கவனத்தோடு அணுகப்பட வேண்டிய பள்ளி மாணவர்களை அழ வைத்துதான் ஊக்கப்படுத்த வேண்டுமா? குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்களும் கல்வியாளர்களும் செய்ய வேண்டியதை நடிகர் தாமு எப்படி செய்கிறார்? இதற்கான அனுமதியை பள்ளிக்கல்வித்துறை எப்படி வழங்கியது? போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன.

இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் தாமு,  “பள்ளி குழந்தைகளை  நான் அழ வைக்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். குழந்தைகளுக்கு மருத்துவர் தடுப்பூசி போடுவார். அப்போது குழந்தை அழும். குழந்தைக்கு காது குத்துகிறோம். அப்போதும் குழந்தை அழும். அதை கொடுமை என்று சொல்ல முடியுமா? அது ஒரு சடங்கு. காது குத்துவதில் மருத்துவ காரணங்களும் உள்ளன. அது ஒரு மெமரி பாயின்ட்.

இந்த நிகழ்வுகளில் எல்லாம் குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் ஏன் குற்றம்சாட்டவில்லை?” எனக் கேள்வியெழுப்பினார்.

“மாணவர்களின் மனங்களில் தேவையற்ற எண்ணங்கள் இருக்கின்றன. அவர்களின் மனதிற்கு நான் தடுப்பூசி போல அன்பு என்னும் ஊசியை செலுத்துகிறேன். அப்படி செலுத்தும்போது மாணவர்களுக்குள் இருக்கும் குழந்தை அழுகிறது. நான் பேசிய பின்பு அவர்களுக்குள் இருக்கும் குழந்தை புதிதாக பிறக்கிறது. குழந்தை பிறக்கும்போது அழுதுகொண்டுதான் பிறக்கும். அதுபோலதான் அவர்களும் அழுகிறார்கள்” என்றவர்,  “பள்ளி மாணவிகள் இதற்கடுத்து யாரிடமும் லவ் லெட்டர் வாங்க மாட்டார்கள் என்றும் தவறான வழியில் செல்லமாட்டார்கள்” என்றவர்,  சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் குப்பையை போட்டால் அந்த குப்பைக்கு நான் பதில் சொல்லவேண்டுமா? எனது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை ஆராய்ந்து பார்த்து விட்டு பேசுங்கள் என்றார்.

மேலும், இதுவரை 28 லட்சம் பள்ளி மாணவர்களை அழ வைத்திருக்கிறேன்” என்றவர்,  ஆசிரியர் எனும் வார்த்தை புதிய விளக்கத்தை அளித்தார். “ஆசு + இரியர்”. ஆசு என்பது மனதில் இருக்கும் குப்பை. ஆசிரியரை விடவா ஒரு உளவியல் நிபுணர் தேவை. அதேபோல, காவல்துறையை விடவா மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை.

ஆசிரியர்கள்தான் என்னை மாணவர்களிடம் பேச அழைக்கிறார்கள். இது வரை நான் பேசி 28 லட்சம் மாணவர்கள் அழுதிருக்கிறார்கள். இதை நான் கடந்த பதினொரு வருடங்களாக செய்துவருகிறேன். என்னுடைய பேச்சைக் கேட்கும் மாணவ, மாணவியர் எதிர்பாலினத்தவர் பின்னே போக மாட்டார்கள். எனது பேச்சை கேட்டால், புகைப்பழக்கம், குடிப்பழக்கத்திற்கு செல்ல மாட்டார்கள்.

“எனக்கு மாணவர்களிடம் பேச என்ன தகுதி உள்ளது எனக் கேட்கிறார்கள். நான் மாணவர்களை சிரிக்க வைக்கிறேன், ரசிக்க வைக்கிறேன். உளவியல் படித்தவர்களுக்கு இதனால்தான் என்மீது கோபம். அவர்களுக்கு பள்ளி மாணவர்களை அணுகத் தெரியாது. அதையெல்லாம் கலாம் சாரிடம் சென்று கற்றுக்கொள்ள வேண்டும். நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனக்கு பயிற்சி அளித்து, என்னை மாணவர்களிடம் அனுப்பினார். மாணவர்களிடம் பேசுவதற்கு கலாம் சார் சொன்ன பத்து கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். கலாம் சார் விவேக்கை மரம் நடச் சொன்னார். என்னை கல்வியின் தரத்தை மேம்படுத்த உழைக்க சொன்னார் என கூறினார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், விளக்கம் அளத்த பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் க.அறிவொளி, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த  “நடிகர் தாமு  பள்ளிக் கல்வித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என்றவர்,  அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக கூறியவர், இனிமேல்  நடிகர் தாமுவை அழைத்து அரசுப்பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “பள்ளி மாணவர்களிடம் யார் யாரை  அழைத்து பேச வைக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை. நிறைய ஆசிரியர்களுக்கு அவ்வாறு விதிகள் இருப்பதே தெரியாது. பள்ளி மாணவர்களிடம் பேசுபவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் இருக்கவேண்டும் என 40 வருடங்களுக்கு முன்பே விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

காவல்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், காவல்துறை பள்ளி மாணவர்களிடம் யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது, என அறிவொளி தெரிவித்தார்.