சென்னை: மாணவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக  துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு கட்டண உயர்வு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளதுடன்,  இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திருப்பி தர உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி,  இளங்கலை படிப்புகளுக்கான செய்முறை, எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்யப்பட்டது. மேலும்,  இளங்கலை ப்ராஜெக்ட் தீசிஸ் தேர்வுக்கான கட்டணம் ரூ.300 இல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதுகலை செய்முறை மற்றும் அனைத்து எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.450 இல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று முதுகலை ப்ராஜெக்ட்டின் ஒவ்வொரு நிலைக்கும் கட்டண் ரூ.600 இல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இளங்கலை, முதுகலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், இளங்கலை பட்டம் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் ரூ.1,500 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து 50 சதவிகித தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   மேலும், கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுக்க இருந்ததாகவும் தகவல்கள் பரவின,.

இதைத்தொடர்ந்து, நடப்பு செமஸ்டருக்கு கட்டண உயர்வு இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில்,  உயர்த்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும், புதிய அறிவிப்பு வரும் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும்,  இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திருப்பி தர உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறியவர், கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்த செலவை கருத்தில் கொண்டே கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதாகவும், விரைவில், அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவித்தவர், இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்  உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்றும் கூறினார்.