மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்துவது புதிதல்ல.

அவ்வப்போது, அந்த பதிவுகளில் சில வைரலாக பரவி அவர்களுக்கு அடையாளம் ஏற்படுத்தி தருவதும் உண்டு.

அந்த வகையில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நவீன் ரசாக் மற்றும் ஜானகி ஒம்குமார் இருவரும், தங்கள் நடன திறமையை இன்ஸ்டாகிராமில் ‘கேஷுவலாக’ பதிவேற்றினர்.

இந்த பதிவு கடந்த சிலநாட்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு வைரலானது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த மாணவர்களின் பெயரை ஆராய்ந்த கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ண ராஜ், ‘டான்ஸ் ஜிஹாத்’ என்ற பெயரில் இவர்கள் போடும் ஆட்டத்திற்கு அந்த பெண்ணின் பெற்றோர் கவனமாக செயல்படுவது நல்லது என்று கூறியதுடன்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முஸ்லிமாக மதம் மாறிய பாத்திமா எனும் நிமிஷா, கிருத்தவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறிய தன் காதலன் இஷா-வை திருமணம் செய்துகொண்டு ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதியாக செயல்பட்ட போது சிக்கிக்கொண்டார்.

அதுபோல், ஜானகியையும் சிரியாவுக்கோ அல்லது வேறுயெங்கோ அழைத்துச்சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்த்துவிடுவார்கள், அவரை பெற்றவர்கள் கவனமாக இருப்பது நல்லது என்று பதிவேற்றினார்.

இந்த பதிவை தொடர்ந்து கேரள இந்துத்துவா அமைப்பினர் இந்த ஜோடிக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பதிவேற்றி வருகின்றனர்.

இதுகுறித்து இவ்விரு மாணவர்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற போதும், இவர்களுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவேற்றிவருகின்றனர், அதில் முக்கியமானவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சஷி தரூர்.

“இந்த இளைஞர்கள் மீது ஹிந்துத்துவா என்ற விஷத்தை கக்காமல், இவர்களின் நடன திறமையை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது தான் இளைய சமுதாயத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை” என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.