கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அதே தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணா தன் மீதான விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ-வில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரிகள் முன்பு இந்த வாரம் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி வந்ததாக ப்ரஜ்வால் ரேவண்ணா மீது கடந்த மாதம் புகார் எழுந்தது.

இந்த புகார் எழுந்ததை அடுத்து தலைமறைவாக இருந்துவரும் ப்ரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பியோடி ஜெர்மனி நாட்டில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் ப்ரஜ்வால் ரேவண்ணா-வின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கர்நாடக மாநில அரசு வலியுறுத்தியது.

இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் ப்ரஜ்வால் ரேவண்ணா எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் அவர் எங்கு இருந்தாலும் தனது பொறுமையை சோதிக்காமல் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக நாடு திரும்புமாறு ப்ரஜ்வால் ரேவண்ணா-வின் தாத்தா-வும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக ப்ரஜ்வால் ரேவண்ணா தெரிவித்துள்ளதாகவும் தன்னைப் பற்றி வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.