சென்னை

லங்கைக்கு எதிரான ஐநா சபை தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.   இதற்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்னும் கோரிக்கை வெகுநாட்களாக உலக நாடுகள் மத்தியில் உள்ளது.  அவ்வகையில் ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை இயற்றி உள்ளது.

இந்த தீர்மானம் ஐநா சபையில் வாக்கெடுப்புக்கு வர உள்ளது.  இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என இந்தியாவில் பல தலைவர்கள் கூறி வருகின்றனர்.  முத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் எனப் பதிந்துள்ளார்.

இதே கருத்தை விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  ஆனால் இது குறித்து இதுவரை மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.  இதனால் மக்களிடையே மத்திய அரசு இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காதோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “இலங்கைக்கு எதிரான ஐநா சபையின் தீர்மானத்தில் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என இலங்கை வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இலங்கை இவ்வாறு கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஈழத் தமிழர்கள் குறித்த எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தியதாக தெரியவில்லை.    ஏற்கனவே ஐநா மனித உரிமை ஆணையத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை பாஜக அரசு ஏன் மறந்து விட்டது?

ஐநா மனித உரிமை ஆணையத்தின் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என நான் பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன்.  மாறாக இலங்கைத் தமிழர்களை அவமதித்து இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாஜக அரசு எடுக்கக் கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.